Pages

Subscribe:

Ads 468x60px

Friday, 13 December 2013

ஜாதியில் என்ன இருக்கு?



"ஜாதிகள் இல்லையடி பாப்பா..."என்ற பாரதியின் பாடலை பள்ளியில் பாடமாக படிக்க வேண்டுமென்றால் கூட முதலில் நாம் என்ன ஜாதி? என்ற விபரம் சொல்லிய பிறகு தான் அந்த பள்ளியில் நம்மை சேர்த்துக் கொள்வார்கள்.


அந்த அளவுக்கு இன்றைக்கும் நாட்டில் ஜாதி என்பது தவிர்க்க முடியாத கருவியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.


கடந்த ஒருமாத காலமாக இந்திய நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை மத்திய அரசு செய்து வருகிறது.இந்தக் கணக்கெடுப்பில் முளைத்திருக்கும் பிரச்சனை தான் "ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு."


நம் நாட்டை ஆங்கிலேயர் ஆண்ட போது 1936 - ஆம் ஆண்டு தான் கடைசியாக ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.அதன் பிறகு நம் நாட்டில் ஜாதி வாரியான கணக்கெடுப்பே நடைபெறவில்லை.


அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக மக்கள் எவ்வாறு பின்தங்கியுள்ளனர் என்பதை அறிந்து, அதற்கு ஏற்றவாறு திட்டங்களைத் தீட்டுவதற்கு இந்த புள்ளிவிவரங்கள் உண்மையிலேயே அவசியம் தான்.


ஆனால் அதேநேரம் ஜாதிகள் மூலமாகத்தான் ஒருவர் தாழ்ந்தவர், ஒருவர் உயர்ந்தவர் என்று தரம் பிரித்து பார்க்க முடியும் என்று நினைப்பது உண்மையிலேயே முட்டாள்தனமான செயல் மட்டுமில்லாது வன்மையாக கண்டிக்கத்தக்கதும் கூட...


ஒரு குறிப்பிட்ட சாதியில் படித்தவர்கள், டாக்டர்கள், அரசுஊழியர்கள் போன்றவர்களின் எண்ணிக்கையை அறியாமல், அந்த சாதியினர் பின்தங்கியுள்ளனரா, இல்லையா என்பதைக் கண்டறிய முடியாது என்ற வாதத்தையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.


தங்களை சார்ந்திருக்கும் மக்கள் எல்லோருடைய வாழ்க்கை தரத்தையும் உயர்த்த வேண்டும் என்று அரசு நினைத்தால் அரசின் எண்ணம் அனைத்து ஜாதி மக்களின் வாழ்க்கை தரத்தையும் கருத்தில் கொள்வதாகத்தான் இருக்க வேண்டும்.


ஆனால் ஜாதி வாரியான கணக்கெடுப்பில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்களின் வாழ்க்கை தரத்தை கவனிக்காமல் விட்டுவிடுவதற்கும் இந்த கணக்கெடுப்பு ஒரு வாய்ப்பாக அமைந்து விடும். இதுவே பிற்காலத்தில் ஜாதிவாரியான மோதலுக்கும் வழிவகுத்து விடும்.


நண்பர் ஒருவர் உங்களிடம் நன்றாக சிரித்து பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென்று உங்களிடம் "நீ எந்த ஜாதி?" என்று கேட்கிறார் என்று வைத்துக்கொள்வோம் அப்போது உங்கள் நண்பரைப் பற்றி உங்கள் மனதில் எழும் எண்ணம் எப்படிப்பட்டதாக இருக்கும்? என்று சற்றே யோசித்துப் பாருங்கள்.


"இவன்..ஜாதி வெறி பிடிச்சவனா இருப்பான் போலருக்கே..?" என்ற மரியாதை குறைந்த எண்ணமாகத்தான் அது இருக்கும்.அதன் பிறகு உங்கள் முகத்தில் எழும் எரிச்சல் கலந்த முகபாவங்களும்,நீங்கள் சார்ந்திருக்கும் ஜாதியின் பெயரை சொல்லி முடித்த பிறகு அவர் முகத்தை நீங்கள் பார்க்கையில் உங்கள் மனதில் எழும் எண்ணங்களும், அல்லது அவர் உங்கள் முகத்தைப் பார்க்கையில் உங்களைப் பற்றி அவர் மனதுக்குள் எழும் எண்ணங்களும் அதுவரை கலகலப்பாக போய்க்கொண்டிருந்த உரையாடலை கொஞ்சம் கொஞ்சமாக முடிவுக்கு கொண்டு வருவதாக நீங்கள் உணர்வீர்கள்.அல்லது உங்கள் நண்பர் உணர்வார்.


லல்லுபிரசாத்யாதவ்,முலாயம்சிங்யாதவ்,டாக்டர்.ராமதாஸ் என்று பல அரசியல் தலைவர்கள் இந்த ஜாதி வாரியான கணக்கெடுப்புக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். மேலும் ஜாதி வாரியான கணக்கெடுப்பு கண்டிப்பாக தேவை என்றும் அவர்கள் அபயக்குரல்களையும் எழுப்பியுள்ளனர்.


ஒரு சமுதாயத்தில் எத்தனை பேர் உள்ளனர்? அவர்களின் தற்போதைய சமூக பொருளாதார நிலை என்ன? என்பது பற்றி எந்தவொரு உண்மையான தகவல்களும் இல்லாமல் நாட்டு மக்களுக்கான சமூக நீதியை எப்படி நிலைநாட்ட முடியும்? என்றெல்லாம் ஜாதி வாரியான கணக்கெடுப்பை ஆதரிக்கும் அரசியல்வாதிகள் கேட்கலாம்.


ஆனால் அதில் அவர்கள் ஜாதிவாரியான ஓட்டுகளை வாங்கி தொடர்ந்து அரசியல் நடத்துவதற்கான சுயநலம் மட்டுமே இருக்குமன்றி கண்டிப்பாக அதில் பொதுநலம் இருக்காது.அதனால் தான் அவர்கள் இப்படி கூச்சலிடுகிறார்கள்.


அதேநேரம் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரியான கணக்கெடுப்பை ஒரு பொருட்டாக கொள்ளாமல் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்,சமூக,பொருளாதாரத்தை மேம்படுத்தும் விஷயங்களையும் கணக்கில் கொண்டால் சிறப்பாக இருக்கும்.


தற்போதைய சமூக வாழ்க்கையில் உள்ள மக்கள் நூற்றுக்கு தொண்ணூறு சதவீதத்தினர் ஜாதியையும்,மதத்தையும் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை.மேலும் ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழும் வாழ்க்கையில் ஜாதி ஒரு பொருட்டாக பார்க்கப்படுவதில்லை என்பதை இதற்கு முன்பு நடத்தப்பட்ட பல ஆய்வு முடிவுகள் நமக்கு தெரிவிப்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

தூக்கத்தை ஆராய்வது என்றால் என்ன?




தூக்கத்தை ஏன் ஆராய வேண்டும். உறக்கம் அற்புதமான விஷயம். அது உடலின் சோர்வு மட்டுமல்ல, உள்மனதின் விழிப்பு. உள் மனத்தின் ஒரு வித விழிப்பு நிலைதான் கனவுகளாக வருகின்றன. அந்த கனவு அநேகமாக விழித்த பிறகு மறந்து போகும், அல்லது வேறு ஒரு கற்பனையாக போய்விடும். அந்த விழிப்பும், உறக்கமற்ற ஒரு மெளன நிலையில் கனவு ஏதும் கண்டிருந்தால் யோசித்து பார்ப்பது நல்லது. அங்கே கண்ட கனவை நினைவு கூரல் எளிது. அங்கே நினைவுபடுத்திக் கொள்ள பல நேரம் அந்த கனவுக்கு அர்த்தம் புரிந்துவிடும். நமது மனவிகாரம் ஆசை, குறிப்பாய் பறக்கிற கனவு வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்கு முன்னேறும் ஆசை அதிகமிருக்கின்றது என்று பொருள். தற்போது செய்ய அரியதாய் இருப்பதை செய்ய வேண்டும் என்கிற நோக்கம் இருக்கிறது என்று பொருள்.


உடனே ‘இப்படி கனவு வருகிறதே என்ன பலன்’ என்று ஆராய வேண்டாம். வேறு யாரையும் கேட்க வேண்டாம். அந்த பாதி விழிப்பு நிலையிலேயே நம் மனசு என்ன சொல்கின்றது என்று நமக்கு நிச்சயம் தெரியும். உங்கள் உள்மனதை உங்களை விட தெரிந்தவர் வேறு யாரும் இருக்கமுடியாது. அப்போது கனவைப் பற்றி தெரியவிட்டாலும் கனவை ஞாபகப்படுத்திக் கொள்ள அதுதான் மிகச்சரியான நேரம். விழித்த பிறகு என்னவோ கனவு வந்ததே, என்ன அது என்று தேடல் இருக்கும். சில சமயம் சுத்தமாய் துடைத்து விட்டதைப் போல் மறந்து போகும்.


சரி ஏன் கனவை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும், உங்களை அறிய உங்கள் கனவுகள் உதவி செய்யும், உங்களை அறிவதைவிட மிகப்பெரிய வேலை இந்த உலகத்தில் வேறெதுவும் இல்லை. நாகரீகம் கருதியோ, நற்பயன் கருதியோ வெளியுலகில் நீங்கள் போட்டுக் கொண்டு இருக்கும் வேஷம் தேவையில்லாதது. உண்மையான உங்களை உங்கள் கனவுகள் அடையாளாம் காட்டும். தன்னை தெரிந்தவனுக்குப் பிறரை அறிதல் எளிது. பிறரை அறிய தன்னை அறிவதே முதல்படி. தன்னையும் பிறரையும் அறியவேண்டிய அவசியம் உலகில் முன்னேறத் துடிப்பவர்களுக்கு நிச்சயம் உண்டு.


எனவேதான் நன்கு விழித்த நிலைக்கு முன்பு புரண்டு மறுபடியும் தூங்கும் நேரத்தை உன்னிப்பாய்க் கவனிக்கச் சொல்கிறேன். அந்த பாதி விழிப்பு நேரம் மிக முக்கியம் என்கிறேன். இதைப் படித்த இரவே தூங்கும் முன்பு நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பாதி விழித்த நிலையில் மனதை கவனிக்க வேண்டும் என்று ஆவல் கொள்ளுங்கள். அவ்வப்போது மறந்துபோனாலும், இடைவிடாது முயற்சி செய்யுங்கள். பிறகு, தினசரி விழிப்பு நிலையில் மனதைக் கவனிப்பது பழக்கமாகிவிடும்.


சரி. கனவே வரவில்லை எதைக் கவனிப்பது ஆழ்ந்த உறக்கம், சலனமில்லாத தூக்கம் இதில் கவனிக்க என்ன இருக்கிறது ஏதுமில்லை. அப்போது விழித்துக் கொள்வதைப் பற்றி யோசிப்போம். விழித்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிப்போம். விழித்து என்ன செய்ய வேண்டும். இன்றைய வேலைகள் என்னென்ன எதுஎது நிச்சயம் செய்தாக வேண்டும் என்று யோசிப்போம்.


கண்மூடி உடம்பு அயர்ந்து தூங்கும், தூக்கத்தின் தொடர்ச்சி உடம்பை விட்டு சற்றும் நீங்காது இருக்கும். ஆனால் மனசு மட்டும் விழித்துக் கொள்ளும். புற சத்தங்கள் அதிகமாகத் தாக்காது காதில் விழுந்தாலும் அந்த சத்தத்தை மனசு ஏற்காது. தூங்கும் நிலையே ஒருவகை தியான நிலை. அல்லது இப்படி சொல்லலாம். தியானம் செய்யும் போது இப்படி ஒரு முக்கால் தூக்க நிலை ஏற்படும். புற சத்தங்களால் பாதிக்கப்படாத ஒரு மெளனம் இருக்கும். அந்த மெளன நேரத்தில் நமது எண்ணங்களில் சார்புத் தன்மை இருக்காது. வேறுவிதமாக சொல்வது என்றால் விருப்பு-வெறுப்பு இருக்காது. தியானம் பழகாமல் இந்த பாதி விழிப்பு நிலையில் மனசை யோசிக்க பயன்படுத்தினால் போதும். நம்முடைய விஷயங்கள் பற்றி, நமது கோபதாபங்கள் பற்றி நமது ஆசைகள் அபிலாஷை பற்றி நம்மால் மிகத் தெளிவாக யோசிக்க முடியும். அதிலுள்ள நியாய அநியாய நிலையைப் பற்றி அல்லது அதை முடிக்கும் காலம் பற்றி, செயல்பட வேண்டிய வேகம் பற்றி கட்டுப்படுகின்ற உறுதி பற்றி தெள்ளத் தெளிவாக நமக்குத் தெரியும்.


இன்னொரு விஷயம் கவனமாக இருக்க வேண்டும். இப்படி சார்பு இல்லாமல் யோசிக்கும் போதே சில சமயம் மனசு முழு விழிப்பு கொள்ளும். உடம்போ உறக்கத்திலிருந்து மீளாது இருக்கும். சோம்பல் உடம்பை அழுத்திக் கொண்டு இருக்கும். அந்த நேரம் மனசு கற்பனைக்குப் போக வாய்ப்பு உண்டு. அதாவது மனசு முழுவதும் விழித்துக் கொண்டு கதை பண்ண ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம்.

அழுவதுக் கூடச் சுகம் தான் - கவிதை!




அழுவதுக் கூடச் சுகம் தான்
 அழவைத்தவரே அருகில் இருந்து
 சமாதானம் செய்தால்...

காத்திருப்பது கூடச் சுகம் தான்
 காக்கவைத்தவர் அதற்கு தகுதி
உடையவரானால்..

பிரிவு கூடச் சுகம் தான்
 பிருந்திருந்த காலம் அன்பை
 இன்னும் ஆழமாக்கினால்..

சண்டைக் கூடச் சுகம் தான்
 சட்டென முடிக்கு கொண்டு வரும்
 சகிப்புத் தன்மை இருந்துவிட்டால்..

பொய்கள் கூடச் சுகம் தான் கேட்பவர்
 முகத்தில் புன்னகையை மட்டும்
 வரவழைத்தால்..

ஆத்திரம் கூடச் சுகம் தான் உரிமையையும்
 அக்கறையையும் மட்டும்
 வெளிப் படுத்தினால்..

விட்டுக் கொடுப்பது கூடச் சுகம் தான்
 விவாதத்தை விட உயர்ந்தது உறவு
 என்றப் புரிதல் இருந்துவிட்டால்..

துன்பம் கூடச் சுகம் தான்
 உண்மையான அன்புக் கொண்ட நெஞ்சத்தை
 உணர்ந்துக் கொள்ள உதவினால் ..

தோல்விக் கூடச் சுகம் தான்
 முயற்சியின் தீவிரத்தை இன்னும்
 அதிகப் படுத்தினால்..

தவறுக் கூடச் சுகம் தான்
 தவறாமல் தவறிலிருந்து பாடம்
 கற்றுக் கொண்டால்..

மொத்தத்தில் வாழ்வில் எல்லாம் சுகம் தான்
 எதிர்மறையில் இருக்கும் நேர்மறையைத்
 தேடித் தெரிந்து நம்மைத் தேற்றிக் கொண்டால்...

தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப்போனார்கள்..




சங்க இலக்கியமான புறநானூற்றிலே உறையூர் முதுகண்ணன் என்னும் புலவர் இன்றைய விஞ்ஞான உலகம் ஆச்சரியப்படும் வகையில் ஒரு குறிப்பைச் சொல்கிறார்.


சூரியன் ஒரு பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அது இவ்வளவு கால எல்லையில் இந்தளவு தூரத்தைக் கடக்கும். அதனால் அதன் வேகத்தைக் கணிக்கக் கூடிதாக இருக்கின்றது. அது செல்லும் வான மண்டலத்தில் ஒரு எல்லை வரை காற்றின் திசை இப்படி இருக்கும். ஈர்ப்புச் சக்தியும் அங்கு உண்டு. அதற்கு மேலே காற்றே இல்லாத அண்ட வெளியும் இருக்கின்றது. அதிலே ஈர்ப்பு விசையும் இல்லை. இதையெல்லாம் நேரே போய்ப் பார்த்து ஆராய்ந்து அறிந்து வந்த வானியல் அறிஞர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்.


செஞ் ஞாயிற்றுச் செலவும்
 அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்
 பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
 வளி திரிதரு திசையும்
 வறிது நிலைஇய காயமும்
 என்றிவை
 சென்று அளந்து அறிந்தார் போல
 என்றும் இனைத்து என்போரும் உளரே



 இது உண்மையானால் அந்தத் தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப்போனார்கள். நாசா கூட இன்றும் நெருங்க அஞ்சும் சூரியக் கிரகத்தை போய்ப் பார்த்தோம் என்று ஏட்டிலே குறித்து வைத்தால் மட்டும் போதுமா? என்ற கேள்வி எழுகின்றது. அதற்கும் புறநானூறு விடை சொல்கின்றது.


இன்றைய விஞ்ஞானிகள் விண்கலங்களில் தானே விண்வெளியை ஆய்வு செய்கிறார்கள் அந்த விண்கலங்கள் எங்களிடம் அன்றே இருந்தன என்கிறது புறநானூறு. அதிலும் சில விமானிகள் இருந்து செலத்தாமல் தாமே புறக்கட்டளைகளை ஏற்று இயங்கும் தானியங்கி விண்கலங்கள் என்கின்றனர்.


புலவர் பாடும் புகழுடையோர் விசும்பில்
 வலவன் ஏவா வான ஊர்தி எய்துப



 இதன் பொருளைப் பாருங்கள்! விசும்பு என்றால் ஆகாயம்; வலவன் என்றால் சாரதி; ஏவாத என்றால் இயக்காத; வானவூர்தி என்றால் விமானம். விண்ணிலே விமானி இருந்து இயக்காத விமானம் என்பது தானே கருத்து. இப்படி ஒரு விமானம் இருந்ததா இல்லையா என்பது வேறு விடயம். இப்படி ஒரு சிந்தனை விமானப் பறப்புக்கு அடித்தளம் இட்ட ரைட் சகோதராகள் பிறப்பதற்கு முன்பே புறநானூற்றில் இடம்பெற்று விட்டது என்பது தான் நாம் எண்ணிப்பார்க்க வேண்டியதொன்றாகும். விமானி இல்லாத விமானங்கள் என்று பிரித்துக் காட்டியதால் அதற்கு முதலே விமானிகள் செலுத்தும் விமானங்கள் இருந்திருக்க வேண்டும்.


 "எதிரிகளால் நாடு சூழப்பட்ட போது அன்னப் பறவை போன்ற விமானத்தில் ஏறிப் பலகனியில் இருந்து தப்ப வைக்கப்பட்ட கர்ப்பிணியான அரசி விமானம் விபத்துக்கு உள்ளாகிக் காட்டிலே விழுந்த போது தான் சீவக வழுதியைப் பெற்றெடுத்தாள்" என்று திருத்தக்க தேவரின் "சீவக சிந்தாமணி" சொல்கிறது. பலகணியில் இருந்து புறப்பட்டதால் கெலியாக (Heli) இருக்குமா என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறது.


கம்பராமாயணத்திலே ஒரு செய்தியைப் பாருங்கள். இராவணன் விமானத்திலே சீதையைக் கவர்ந்து போய்விட்டான். இது புளித்துப் போன செய்தி! இராமரும் தம்பியும் தேடிப் போகிறார்கள். இராவணனின் விமானச் சக்கரங்கள் மண்ணிலே உருண்டு சென்ற அடையாளங்கள் தெளிவாகத் தெரிகிறது. அதைப் பின்பற்றிச் செல்கிறார்கள். ஆனால் போகப் போக தெளிவாகத் தெரிந்த சக்கரச் சுவடுகள் தெளிவில்லாமல் ஆகி விடுகின்றன. மண்ணிலே பட்டும் படாமலும் தெரிகின்றன. ஒருகட்டத்துக்கு மேல் விமானத்தின் சுவடுகளே இல்லை. ஆம்! விமானம் ஓடுபாதையில் ஓடி வானத்தில் எழுந்து போய்விட்டது.


மண்ணின் மேல்அவன் தேர்சென்ற சுவடு எல்லாம் ஆய்ந்து
 விண்ணில் ஓங்கிய ஒருநிலை மெய்யுற வெந்த
 புண்ணில் ஊடுஒரு வெல்என மனம்மிகப் புழுங்கி
 எண்ணி நாம்இனிச் செய்வது என்ன இளவலே என்றான்.



விமானங்கள் ஓடுபாதையில் ஓடி வேகம் எடுத்து புவியீற்பை முறித்த பின்தான் மேலே எழ முடியும் என்ற விஞ்ஞான விளக்கம் சோழர் காலத்துக் கவிஞனான கம்பனுக்கு எப்படித் தெரிந்து இருந்தது. விமானப் பறப்பை நேரில் கண்டானா? இல்லை அது தொடர்பான ஏடுகள் அந்த அறிவை வழங்கினவா? தாடியும் சடாமுடியும் கொண்டதாகச் சித்தரிக்கப்படும் சங்கப் புலவர் கூட்டத்தில் விமானங்களை வடிவமைக்கும் திறன் தெரிந்த பொறியியலாளரும் இருந்தார்களா என்பதெல்லாம் ஆய்வுக்கு உரிய விடயங்கள்.


இப்படியான வானியல் அறிவுக்கு கணக்கிலும் பௌதீகத்திலும் புவியியலிலும் தமிழன் அறிவு மிக்கவனாக இருந்திருக்க வேண்டும் என்பது உண்மைதானே!

சுருளிமலை அதிசயம்!




உலக அதிசய பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலையை யுனெஸ்கோ [unesco] நிறுவனம் அறிவித்துள்ளது.


இந்தியாவின் பருவ கால நிலைகளில் மாற்றம் செய்து மழையை பொழியச் செய்வதில் இதன் பங்கு அளப்பரியது.


மேற்கு தொடர்ச்சி மலை என்பது வட இந்தியாவிலிருந்து தொடங்கி பல்லாயிரம் மைல் அளவில் பரந்து நமது தமிழ்நாட்டின் வழியாக கேரளா வரை அமைந்துள்ளது.


பதினெட்டுச் சித்தர் பெருமக்களும் சங்கம் அமைத்து வாழ்ந்த மலை எனவும்,தென் இந்தியாவின் "கைலாய மலை" எனப் போற்றப்படும் "சதுரகிரி மலை" இதில்தான் அமைந்துள்ளது.இதனுடன் இணைந்து கேரளா எல்லை வரை பரவி தெய்வீக ஆற்றலுடன் விளங்கும் ஒரு மலைதான் "சுருளி மலை" ஆகும்.இம் மலை தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது.


சுருளி மலை பற்றிய அதிசய செய்தி ஒன்று சுமார் 25 -வருடங்களுக்கு முன்பு ஒரு வார இதழில் வெளிவந்தது. அதில் உள்ள விபரம் :-


அந்தக் கால அதிசயம் - மர்மக்குகையில் தேவ கன்னிகைகளா ? என்ற
 தலைப்பில் வெளியான கட்டுரை விபரம்.


மதுரையில் இருந்து தேனி வழியாக 70 -கிலோ மீட்டர் தொலைவில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதில் அமைந்துள்ளது சுருளிமலை.


ஆண்டு முழுதும் தண்ணீர் வற்றாமல் எப்போதும் கொட்டிக் கொண்டி ருக்கும் சுருளி அருவி மிகப் பிரசித்தி பெற்றது.இவ்வளவு நீர் எங்கி ருந்து உற்பத்தியாகிறது என்பது இன்று வரை யாருக்கும் புரியாத புதிர்.


ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு மேல் காட்டுக்குள் மனிதர்கள் செல்வ தில்லை கதம்ப வண்டுகள் ஐந்து கொட்டினாலே ஆள் காலி என்கின்றனர்.


அருவிக் கரையில் இருந்து மூன்று பர்லாங் தொலைவில் “கைலாச நாதர் குகை” உள்ளது.கம்பம் பள்ளத்தாக்கில் வசிக்கும் பெரும்பான்மை இனமான கன்னடம் பேசும் கவுடர்களில் "மார்கழியார்" என்ற பிரிவினர் சில ஆண்டுகளுக்கு முன்னர் தங்களுக்குள் பூசாரி ஒருவரை தேர்ந்தெ டுக்கவும்,சுருளி மலையில் மறைந்துள்ள "கிருஷ்ண பகவானின்" புல்லாங் குழலைக் கண்டு பிடிக்கவும் இங்கு யாகம் வளர்த்து,அன்ன தானம் செய்தனர்.அப்போது பத்து வயது சிறுவனுக்கு சாமி [அருள்] வந்து கைலாசநாதர் குகைக்குள் நுழைந்தாக வேண்டும் என்றான்.


அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.குகைக்குள் நுழைவது அத்தனை சுலபமல்ல.கும்மிருட்டு விஷ ஜந்துக்கள் இருக்கலாம்,மேலும் நிமிர்ந்த நிலையில் உள்ளே புக முடியாது.! படுத்த நிலையில் தவழ்ந்துதான் போக வேண்டும்.எனவே சிறுவன் கையில் ஒரு அகல் விளக்கை கையில் பிடித்தபடி தவழ்ந்து சென்றான்.சுமார் ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்து அவன் சொன்ன செய்திகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின.


உள்ளே மிகப்பெரிய அரங்கம்.ஒளி உமிழும் உருண்டைகள் ஆங் காங்கே கல் தூண்களின் நுனியில் பொருத்தப் பட்டிருந்தனவாம்.திரு நீற்றில் புரண்டு எழுந்தார் போல் வெண்மையான உடலும்,நீண்ட தாடியும் கொண்ட முனிவர்கள் கல் ஆசனங்களில் அமர்ந்து தேவ கன்னிகளின் நடனத்திற்காக காத்திருந்தார்களாம்.


மற்றொரு அதிசயச் செய்தி இருப்பதாகவும்,அது "தேவ ரகசியம்" என்றும் அந்த சிறுவன் கூறினான்.


சுருளி மலையில் உள்ள அருவியிலிருந்து மேற்கே சுமார் ஐந்தாறு மைல்களுக்கு அப்பால் தான் கேரளா,தமிழ் மாநிலங்களுக்கு தீராத பிரச்சினையாக இருந்து வரும் “கண்ணகி கோயில்” [மங்கள தேவி கோட்டம்] உள்ளது.


மதுரையை எரித்த கையோடு தலைவிரி கோலமாக நடந்து வந்த கண்ணகி இந்த அருவியில் நீராடி புஷ்பக விமானம் ஏறிச் சென்றதாக கூறுகிறார்கள்.மேலும் இங்கு தோண்டி எடுக்கப்பட்ட கண்ணகி சிலை மற்றும் கல்வெட்டுக்கள் மூலமாக இன்னும் பல ஆதாரபூர்வமாக வியத்தகு செய்திகளை ஆராய்ச்சியாளர்கள் விரைவில் தருவார்கள் என எதிர்பார்க்கலாம்.

உங்கள் கணினியில் ஹார்ட் டிஸ்க் நிரம்பிவிட்டது" என்ற தகவல் உங்கள் கணினி காட்டுகிறதா?




 உங்கள் கணினியில் ஹார்ட் டிஸ்க் நிரம்பிவிட்டது" என்ற தகவல் உங்கள் கணினி காட்டுகிறதா? அது ஒன்றும் பெரிய பிரச்னையே அல்ல. இதோ அதற்கான எளிய தீர்வுகளை பார்ப்போம்.


முதலில், ஹார்ட் டிஸ்க்கில் உள்ள இடம் குறைந்துவிட்டதாக உங்களுக்கு ஒரு தகவல் வரும். உடனே என்னவோ, ஏதோவென்று பதற வேண்டாம்.


உங்கள் கணினியில் நீங்கள் எப்பொழுதாவது பயன்படுத்தவென பதிந்திருக்கும் மென்பொருள்களை நீக்குங்கள். அடுத்து temp கோப்புகளை நீக்குங்கள்.


அப்படி நீக்கியும் கூட, உங்களுடைய கணினியில் மீண்டும் 'ஹார்ட் டிஸ்கில் போதுமான இடம் இல்லை. கோப்புகளை நீக்குங்கள்' என்ற எச்சரிக்கை செய்தியைக் காட்டினால், கீழ்க்கண்ட மென்பொருள்கள் உங்களுக்கு உதவும்.


இம்மென்பொருள் எதற்காக என்றால், உங்கள் கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு ட்ரைவ்களில் (அதாவது C:, D:, E:, F:, என ஹார்ட் டிஸ்க் பகுதியாக பிரிக்கப்பட்டிருக்கும் இல்லையா? )ஒவ்வொரு டிரைவும் எந்தளவிற்கு கோப்புகளை கொண்டிருக்கிறது.. ஒவ்வொரு டிரைவின் கொள்ளவும் எவ்வளவு இருக்கிறது, அந்த டிரைவில் எந்த கோப்புகள் அதிக இடம் பிடித்துள்ளன என்பதை நமக்கு சரியாக காட்ட இந்த மென்பொருள்கள் பயன்படுகின்றன.


டிரீ சைஸ் ஃபீரீ மென்பொருள் -(TREE SIZE FREE)


இம்மென்பொருள் உங்கள் கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்க் ஒவ்வொன்றும் எவ்வளவு இடத்தை பெற்றுள்ளது? ஒவ்வொரு டிரைவில் எந்த கோப்புகள் அதிகமான இடத்தை அடைத்துக்கொண்டிருக்கின்றன என்பதை துல்லியமாக ஒரு சில வினாடிகள் உங்களுக்கு காட்டும்.


கிராஃபிக்ஸ் பார் மூலம் ஒவ்வொரு கோப்பும் அந்த டிரைவில் எடுத்துள்ள இடத்தை காட்டும். இந்த கிராஃபிக்ஸ் பார் மற்றும் வரைபட வடிவில் உள்ள இந்த அளவீடுகளில் உள்ள வண்ணங்களை உங்கள் விருப்பம் போல் மாற்றி அமைக்கலாம்.


இதன் அடிப்படையில் எந்த போல்டரில் உள்ள கோப்புகளை நீக்குவது என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ள முடியும்.


மென்பொருளைத் தரவிறக்கச் சுட்டி:http://www.jamsoftware.com/treesize_free


இதனை போன்றே ஹார்ட் டிஸ்க்கில் அதிக அளவு இடம்பெற்றுள்ள கோப்புகள் மற்றும் டிரைவ்களை கண்டறிய உதவும் மற்ற மென்பொருள்:


2. WINDIRSTAT

தறவிக்கம் செய்ய: http://windirstat.info/download.html

3. XINORBIS

தறவிக்கம் செய்ய: http://www.xinorbis.com/

4. RIDNACS

தறவிக்கம் செய்ய: http://www.splashsoft.de/Freeware/ridnacs-disk-space-usage-analyzer.html

5. SPACE SNIFFER

தறவிக்கம் செய்ய: http://www.uderzo.it/main_products/space_sniffer/


குறிப்பு: டிஸ்க் ஃபைட்டர் என்ற இந்த மென்பொருளும் உங்கள் கணினியில் உள்ள தேவையில்லாத கோப்புகளை நீக்கி, உங்கள் Hard Disk -ல் உள்ள இடத்தை மீட்டுக்கொடுக்கிறது.


தரவிறக்கம் செய்ய: http://www.spamfighter.com/FULL-DISKfighter/Functions/Download.asp